

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மதுரை மாவட்டம் இடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ளன.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்ய சதுரகிரியில் குவிவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு ஆடி அமாவாசை திருவிழா எதிர் வரும் 20.07.2020 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன்படி தடை உத்தரவானது 31.07.2020ம் தேதிவரை அமலில் உள்ளது.
எனவே, சாமி கும்பிடும் பொருட்டு சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும், தாணிப்பாறை, மாவூத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 19.07.2020 முதல் 21.07.2020 வரை பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த உத்தரவினை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் அறிவித்துள்ளார்.