

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி, முதன்முறையாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாள்தோறும் ஒற்றை இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து, பிறகு இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 3-ம் தேதி இந்த எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்தது.
முதல் ஆயிரத்தைத் தொட எடுத்துக்கொண்ட காலம் சுமார் 90 நாட்களாகும். அடுத்த ஆயிரம் தொற்றாளர்களுக்கு கடந்த 3-ம் தேதி முதல் 17 வரையிலான 15 நாட்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 17) வரை கரோனா வைரஸ் தொற்று 2,039 என்றும், நேற்று 114 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. .
இதனை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில், ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சார் ஆட்சியர் அனு உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மற்றும் செஞ்சி, வானூர் பகுதிகளில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுக்கும் மற்ற சிகிச்சைப் பிரிவுகளுக்கும் நடுவில் உறுதியான தடுப்பு பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.