

மதக் கலவரத்தைத் தூண்டிவி டும் வகையில் கருத்து பதிவிடப்பட்ட யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகரில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கந்தசஷ்டி பற்றி ஆட்சேபகரமான கருத்து பதிவிடப்பட்ட யூடியூப் சேனல் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.அந்த சேனல் பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கிறது. அந்தச் சதியை தமிழக அரசு முறியடிக்கும்.
தினமும் ஓர் அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களைக் கொடுத்து அரசியல் செய்கிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால்தான் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு வந்ததில் இருந்து கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. 33 லட்சம் லிட்டராக இருந்த கொள்முதல் இன்று 40 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என்று கூறினார்.