

கந்த சஷ்டி கவசம் பாடலையும், முருகக் கடவுளையும் அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஒரு யூ-டியூப் இணைய தொலைக்காட்சியில் தமிழ்க் கடவுள் முருகனை புகழ்ந்து பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் பாடலின் பொருளையும், நோக்கத்தையும் திரித்து, முருகக் கடவுளையும் அவரது பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கந்த சஷ்டி கவசம், பாலதேவராய சுவாமிகளால் கடந்த 16-ம் நூற்றாண்டில் ஈரோடு அருகே உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயற்றப்பட்டதாகும். முருகப்பெருமானை வேண்டினால் மனித உடலில் எந்த பாகத்தையும் நோய்கள் தாக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்தி இந்த பாடல்கள் இயற்றப்பட்டன. இந்த பாடல் மீது இந்து மத மக்கள், குறிப்பாக தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடுபவர்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
இணைய ஒளிபரப்புக்கு தடை
மத நல்லிணக்கத்தையும், இறை நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இணைய தொலைக்காட்சிகளை சைபர் கிரைம் காவல் பிரிவு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்போது, தானாக முன்வந்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற இணைய தொலைக் காட்சி ஒளிபரப்பை தடை செய்யவும் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள் ளார்.