ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவு நீரால் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.151 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.151 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Updated on
2 min read

சாயக்கழிவு நீரால் ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.151 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸால் 468 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 265 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் இறந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வரை 57 ஆயிரத்து 737 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கீழ் பவானி கால்வாயில் ரூ.935 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான கருத்துரு அரசிடம் உள்ளது. இந்த திட்டம் நிறைவேறுகின்ற போது, கடைமடை பகுதி விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் சென்றடையும்.

உபரி நீரைச் சேமிக்கும் வகையில், பவானி ஆற்றின் குறுக்கே ரூ.81 கோடி மதிப்பீட்டில் 7 தடுப்பணைகள் கட்டப்படும்.

காலிங்கராயன் கால்வாயில் ரூ.70 கோடி மதிப்பீட்டிலும், புகலூர் வாய்க்கால் ரூ.40 கோடி மதிப்பீட்டிலும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் கால்வாய் மற்றும் ஏரிகள் புனரமைக்கும் பணிகளில், ஈரோடு மாவட்டத்தில் ரூ.27.71 கோடி மதிப்பில் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

குண்டேரிப்பள்ளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடைகளின் குறுக்கே ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் மூன்று தடுப்பணைகள் கட்டப்படும்.

ஈரோடு நகரின் வெளிவட்ட சுற்றுச் சாலை பணி தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளதால் மூன்று மாதத்தில் அப்பணி முடிவடையும். தொப்பூர் - மேட்டூர் - பவானி -ஈரோடு சாலையை தேசிய நெடுஞ்சாலையாக உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

சாயக்கழிவு நீரால் ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. ஈரோட்டில் 147 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இதில் 41 சாயத் தொழிற்சாலைகள் தனித்தனியே தங்கள் வளாகத்தில் பூஜ்யம் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும்.

தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியும், கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ம் தேதியும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும், என்றார்.

விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, தோப்பு வெங்கடாசலம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘வாக்குறுதிகளை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில், எடப்பாடி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:
ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி, வீரக்கல்புதூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எடப்பாடி தொகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய கல்லூரிகளும், தொழில்பேட்டைகளும் அமைத்துள்ளோம், என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பணியின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில், ஆட்சியர் ராமன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, மனோன்மணி, வெங்கடாஜலம், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in