

கந்த சஷ்டி கவசம் மற்றும் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரங்களையடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவச விவகாரம் மற்றும் கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரங்கள் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த இரு சம்பவங்களுக்கும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்து விடக்கூடாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதில் காவல் துறை கவனமாக உள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், சந்தேக நபர்களை பிடித்து உடனடியாக விசாரிக்க வேண்டும், சிசிடிவி கேமரா காட்சிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னையில் சுமார் 19 பெரியார் சிலைகள் உள்ளன. அத்தனை சிலைகளையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். சாதாரண உடை அணிந்த போலீஸாரும் நிரந்தர மாக கண்காணிக்கின்றனர்.