

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘டோசிலி சுமாப்’ என்ற உயர் ரக மருந்தை கரோனா சிகிச்சை அளிக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பு இல்லாததால் இந்த மருந்துகள் கள்ளத்தனமாக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை விற்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இருப்பு இல்லை
தமிழகத்தில் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு டோசிலி சுமாப் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த மருந்து பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், வெளியில் சிலர் ரகசியமாக கள்ளச்சந்தையில் வழங்கி வருகின்றனர்.
அதிக விலை
இந்த மருந்தின் தற்போதைய விலை சுமார் ரூ.40 ஆயிரம் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது வெளியே ரூ.75 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த மருந்தை கரோனாவுக்காக சிகிச்சை அளிக்கும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் நியாயமான விலைக்கு கிடைக்க உறுதி செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இந்த மருந்து இல்லை வெளியில் வாங்கி வாருங்கள் என்று தெரிவிக்கின்றனர். இது எங்கு கிடைக்கும் என்று கூட தெரியாத சராசரி மக்கள் அதைத் தேடி வாங்குவதற்குள் காலம் கடந்து விடுகிறது. இந்த மருந்து போதிய அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மருந்தைவைத்துக்கொண்டே கள்ளச்சந்தையில் விற்கும் நோக்கத்தில் வெளியில் வாங்கி வரும்படி நிர்பந்தித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால்மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் முறையிடலாம்” என்றார்.