தொலைபேசியில் பேசியது என்ன?- விஷ்ணுபிரியா நண்பரிடம் 4 மணி நேரம் விசாரணை

தொலைபேசியில் பேசியது என்ன?- விஷ்ணுபிரியா நண்பரிடம் 4 மணி நேரம் விசாரணை
Updated on
2 min read

"டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி போலீசார் அவரது நண்பரும், வழக்கறிஞருமான மாளவியாவிடம் நேற்று சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விஷ்ணுபிரியாவுடன் செல் போனில் அதிகம் பேசியது யார், யார்? என பட்டியல் எடுத்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், மதுரை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா(34) என்பவரிடம் டிஎஸ்பி விஷ்ணுபிரியா அடிக்கடி பேசி உள்ளார்.

இதையடுத்து, மாளவியாவை விசாரணைக்கு வர சிபிசிஐடி போலீ ஸார் அழைத்திருந்தனர். நேற்று காலை அவரும், வழக்கறிஞர்கள் பாஸ்கர்மதுரம், கண்ணன், வீர பாண்டி ஆகியோரும் சேலம் சிபிசிஐடி அலுவலகம் வந்திருந் தனர். விசாரணை குறித்து வழக்க றிஞர் பாஸ்கர்மதுரம் கூறியபோது, மாளவியா நாகர்கோவிலை சேர்ந்தவர். மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். அரசு வழக்கறிஞரிடம் உதவியாளராகவும் இருந்து வரு கிறார். தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா திருப் பத்தூரில் பணிபுரிந்தபோது வழக்கு கள் தொடர்பாக சட்ட சந்தேகங்களை மாளவியாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்றார்.

வழக்கறிஞர் மாளவியாவிடம் நேற்று சிபிசிஐடி எஸ்.பி. நாக ஜோதி சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். விஷ்ணுபிரியா தொலைபேசியில் பேசிய தகவல்களை கேட்டறிந்தார். முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் உணவு இடைவேளையில் வெளியே வந்த வழக்கறிஞர் மாளவியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிகாரிகள் நெருக்குதல்

உயிரிழந்த டிஎஸ்பி விஷ்ணு பிரியா பல்வேறு வழக்கு தொடர் பாக என்னிடம் பல முறை தொலை பேசியில் பேசியுள்ளார். அப்போது தன்னுடைய உயர் அதிகாரிகள் தனக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், பல்வேறு சமயங்களில் பொய் வழக்கு பதிவு செய்ய சொல்வ தாகவும் கூறியுள்ளார்.

‘இந்த துறைக்கு வந்து எதை செய்யக் கூடாது என்று நினைத் தேனோ அதை செய்ய சொல்கின் றனர்’ என்று விஷ்ணுபிரியா என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்லாமல் குமாரபாளையம் ஜெகநாதன் கொலை வழக்கில் தனக்கு கடுமையான நெருக்கடி வந்ததாகவும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறினார்.

இதுதவிர மாதம்தோறும் பணம் வசூல் செய்து கொடுக்க சொல்லி தன்னை அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், டாஸ்மாக் கடையில் சோதனை செய்யக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து காவல் ஆய்வாளர் ஒருவர் மூலம் பணம் வசூல் செய்து கொடுக்க கூறியுள்ளனர். ஏடிஎம் கொள்ளை வழக்கிலும் தன்னை தரக்குறைவாக திட்டிவருவதாகவும் கூறினார்.

விஷ்ணுபிரியாவின் தற் கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியும், அதிகாரிகள் தரக் குறைவாக பேசியதுமே காரணம். குடும்ப பிரச்சினை என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

இந்த வழக்கு திசை மாற்றப் பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். சிபிஐ விசாரணை கோரவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in