ரிப்பன் மாளிகை பணியாளர்கள் 564 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனை; விரைவில் சென்னை முழுவதும் நடத்தப்படும்: ஆணையர் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 564 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை (Antibody Test) மேற்கொள்ளப்பட்டது, இதில் 454 பேர் எவ்வித தொற்றும் இல்லாத நிலையில், 28 பேர் தொற்று அறிகுறி இருந்ததால் பிசிஆர் சோதனைக்கு அனுப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவின்படி கொரோனா தொற்றை கண்டறியும் சோதனைகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10,000-க்கு மேல் எடுக்கப்படுகின்றது.
தொற்று உள்ளவர்களை கண்டறிதல், 12,000 களப்பணியாளர்களை கொண்டு வீடுகள் தோறும் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளனவா என கணக்கெடுப்பு செய்தல், காய்ச்சல் மருத்துவ முகாம்கள் மூலம் நோயாளிகளை கண்டறிதல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேலும் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் (ICMR) ன் வழிக்காட்டுதலின்படி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என கண்டறியும் பரிசோதனை (Antibody Test) செய்யப்பட்டு வருகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனையானது குறைந்த நேரத்தில் அதாவது 15 நிமிடத்திற்கு ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய இயலும்.
முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை பணியாளர்களுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை (Antibody Test) மேற்கொள்ளப்படும்.
அதன்படி நேற்று (16.07.2020) மாநகராட்சி தலைமையகத்தில் பணிபுரியும் 564 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 452 நபர்களுக்கு எந்த தொற்று இல்லை எனவும், 84 நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய் தொற்று வர வாய்ப்பில்லை எனவும், 28 நபர்களுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த 28 நபர்களுக்கும் இன்று கரோனா தொற்று கண்டறியும் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்”.
என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
