மக்கள் தற்காப்பு முறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும்: மதுரை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உருக்கம்

மக்கள் தற்காப்பு முறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும்: மதுரை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உருக்கம்
Updated on
2 min read

மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே ‘கரோனா’ பரவலைத் தடுக்க முடியும் என்று மாவட்ட ‘கரோனா’ தொற்று நோய் தடுப்பு கணிப்பாய்வு சிறப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் ‘கரோனா’ நோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 1,500 பேருக்கு தினமும் மூன்று வேளை ஆரோக்கியமான உணவு மற்றும் காலை மாலை இருவேளை சூப், இஞ்சி டீ மற்றும் தானிய வகைகள் வழங்கப்படுகிறது.

இந்த உணவு தயாரிக்கும் இடத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்ட கரோனா தடுப்பு கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் உடன் இருந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரமோகன் கூறியதாவது;

உணவே மருந்து என்பதை போல் இங்கு தயார் செய்யும் உணவு மிகவும் ஆரோக்கியமான, சத்தான உணவாக உள்ளது. சமையல் கூடமும், சுகாதார முறையில் உள்ளது. பணியாளர்களும் முக கவசம், தலைஉறை, கைஉறை, அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

உணவை நாங்கள் சோதித்தபோது இதில் தமிழர்கள் பாரம்பரியம் மருத்துவ குணமுள்ள மிளகு, இஞ்சி, மஞ்சள் பொடி, சீரகம், பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். ஆரம்பநிலையில் மதுரை மாவட்டத்தில் இந்த நோய் தொற்று 4 சகவீதம் இருந்தது. அதன்பின் 10 சதவீதமாக உயந்தது. முழு ஊரடங்கு நடவடிக்கையால் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது.

மதுரையில் நாளுக்கு நாள் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறோம்.

காய்ச்சல் மையத்தில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டு நோய்த் தொற்றுகளை முன்பே கண்டறியப்பட்டு நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 150 ஐசியூ படுக்கை வசதி உள்ளது. இதில் 20 பேர் மட்டுமே ஐசியூ சிகிச்சை பெறுகின்றனர்.

வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் மிகவும் குறைவாக இருக்கின்றனர்.

மதுரை அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் இருக்கிறது. மதுரையில் அடுத்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க இருக்கிறோம்.

ஊரடங்கு தளர்வு காரணத்தினால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே இதன் பரவலைத் தடுக்க முடியும்.

அதனால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சுகாதாரத்துறையின் அனுமதியில்லாமல் கிளினிக்குகளில் ஹோம்கேர் சிகிச்சை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in