Last Updated : 17 Jul, 2020 06:39 PM

 

Published : 17 Jul 2020 06:39 PM
Last Updated : 17 Jul 2020 06:39 PM

ஊரடங்கு சமயத்தில் புதுக்கோட்டையில் ஒரே நாளில் மனநலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்பு

புதுக்கோட்டையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் அலுவலர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஒரே நாளில் மனநலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டு மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி ஏராளமானோர் சுற்றித் திரிவதாக ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட மனநல திட்ட அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம், நகராட்சி ஆணையர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் குழுவாக சேர்ந்து புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் ஆதரவற்ற மனநல நோயாளிகள் குறித்து விசாரித்தனர்.

அப்போது, புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே தங்கி இருந்த 4 பேரை இன்று (ஜூலை 17) மீட்டு புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

அங்கு, முதல் கட்டமாக அவர்களுக்கு உணவு கொடுத்து, உடை மாற்றம் செய்து, சிகை அலங்காரம் செய்யப்பட்டது. ஆதரவின்றி தவித்தோரை கரோனா சமயத்தில் மீட்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. கரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே இவ்வாறு ஆதரவின்றி தவித்த மக்களை மீட்டு காப்பகத்தில் அலுவலர்கள் சேர்த்ததை பொதுமக்கள் பாராட்டினர்.

இது குறித்து மருத்துவ அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் கூறும்போது, "மனநல பாதிப்புடன் ஆதரவின்றி சுற்றித் திரிந்தோர் மீட்கப்பட்டு இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், குணமடைந்த பிறகு உரிய முகவரி பெறப்பட்டு உறவினர்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x