Published : 17 Jul 2020 06:36 PM
Last Updated : 17 Jul 2020 06:36 PM

மதுரையில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உண்மை விவரத்தை வெளியிடுக: சு.வெங்கடேசன் எம்.பி. அரசுக்குக் கோரிக்கை

கரோனாவால் பாதிப்பால் உயிரிழந்து புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட மதுரை மாவட்ட கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 205. ஆனால், அரசு வெறுமனே 129 என்கிறதே... எது உண்மை? என்று சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

’’மதுரை மாவட்டத்தில் ஜூலை 15-ம் தேதி வரை நிகழ்ந்துள்ள கரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15-ம் தேதிவரை கரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர்.

மதுரை கீரைத்துறை அஞ்சலி மின்மயானத்தில் ஜூலை 15-ம் தேதி வரை கரோனா நோயால் இறந்தவர்கள் 57 பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமான மையவாடியில் கரோனா நோயால் இறந்தவர்கள் 39 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர். இஸ்லாமிய அமைப்புகளால் பிற இடங்களில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை 2. கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7. இவை எல்லாம் நமது விசாரணையில் தெரியவந்த தகவல்கள். முழு விவரமும் கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

மொத்தத்தில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 67 பேர் நீங்கலாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 205 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மயானம், அடக்கஸ்தலம், கல்லறைத்தோட்டம் ஆகியவற்றின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அரசோ, 129 பேர்தான் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்ததாக அறிவித்துள்ளது.

அப்படியானால் மூன்றில் ஒரு பங்கு மரணத்தை (அதாவது, 76 பேர் இறப்பை) மறைக்கிறதா தமிழக அரசு? உண்மை நிலையென்ன என்பதை உடனடியாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x