Published : 17 Mar 2014 09:36 AM
Last Updated : 17 Mar 2014 09:36 AM

தமிழக போலீஸ் மீது புகார் செய்வேன்: கிருஷ்ணகிரியில் விஜயகாந்த் பேச்சு

தமிழக காவல் துறையினர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஜயகாந்த் பேசியது:

ஓசூரில் மின் வெட்டுப் பிரச்சினையால் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. தொழிலா ளர்களும், உரிமையாளர்களும் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து கிடையாது.

டாஸ்மாக் கடைகளின் இலக்கை ரூ.16 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்தியவர்கள் விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிருஷ்ணகிரி எம்.பி. சுகவனத்துக்கு மக்களைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென ஜெயலலிதா பேசுகிறார். அதிமுக-தான் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திரமோடியால் மட்டுமே முடியும். ஊழலற்ற ஆட்சியை அமைக்கவும், நரேந்திரமோடி பிரதமராகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள். எங்கள் கூட்டணியில் சண்டை கிடையாது. நாடு வல்லரசாக வேண்டும். அதேசமயம், தமிழகத்தை நல்லரசு ஆள வேண்டும். இது மக்களின் கையில்தான் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை, ரயில் போக்குவரத்து வசதியில்லை. குறைகளைச் சுட்டிக்காட்டினால் விஜயகாந்த் அதிமுக-வை மட்டும் திட்டுவதாகக் கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்டு விட்டதாக அதிமுக-வினர் கூறினர். இப்போது வெளிச்சம் வந்து விட்டதா?

ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும்போது 3 கிலோமீட்டர் தூரத்துக்கு காவல் துறையினர் அரண் அமைத்து பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள், என்றார்.

விஜயகாந்த் பேச்சால் குழப்பம்!

கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் பேசுகையில், மாவட்ட முழுவதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறுவதற்குப் பதிலாக, ‘கே.ஆர்.பி. அணை திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றவில்லை’ என்று பலமுறை கூறினார்.

அவரது பேச்சால் தொண்டர்களும், பொதுமக்களும் குழம்பினர். கிருஷ்ணகிரி தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். ஆனால், அவரைப் பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x