

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தவிர தனியார் மருத்துவமனையிலும் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைப்போல் அரசு, மற்றும் தனியார் பள்ளிகள், விடுதிகளில் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் தனிமை முகாம் ஏற்படுத்தப்பட்டு அங்கு கரோனா உறுதி செய்யப்பட்ட 132 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அங்கிருந்து சுவர்ஏறி குதித்து வெளியே சென்றார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தோர் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கரோனா நோயாளிகள் தனிமை முகாமில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து நோயாளிகளின் பட்டியலை சரிபார்த்தனர்.
அப்போது சிகிச்சையில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. கரோனா பாதித்தவர் தப்பி சென்று பொது இடங்களில் உலா வருவதால் மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு காமிராவில் நோயாளி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.