

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையத்தை புறநகரில் காற்றோட்டமான இடவசதியுள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போது 180-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விரிவாக்கம் செய்யப்பட்ட கரோனா மருத்துவ மையமாக செயல்படுகிறது.
இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு சித்த மருத்துவ முறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 4 ஏக்கர் பரப்பளவு உள்ள இக் கல்லூரி வளாகத்தில் நோயாளர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையை சுற்றி கல்லூரி அலுவலகம், கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகள், பட்ட மேற்படிப்பு மாணவியர் மற்றும் உள்ளுறை பயிற்சி மருத்துவ மாணவர் விடுதிகள், மருந்து செய் நிலையம் ஆகியவை பல்வேறு பணியாளர்களுடன் செயல்படுகின்றன.
இதனால் இங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்குத் தேவையான காற்றோட்ட வசதி இல்லாமலும், மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் போன்ற புத்தாக்கப் பயிற்சிகள் செய்வதற்கான இடவசதி இல்லை. சிறைக் கைதிகள்போல் நோயாளர்கள் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையால் அவர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
மேலும் திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் சிகிச்சை மையம் அமைந்திருப்பது சுற்றுப்புற பகுதி மக்களுக்கும் நோய் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாநகருக்கு வெளியே காற்றோட்டமான இடத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.