சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கரோனா தொற்று: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் முதலே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஜூலை 17) உறுதியானதை அடுத்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாக அலுவலரை சந்தித்து 3 நாள்கள், வசூலை நிறுத்தி பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகமோ, அவ்வாறு செய்ய இயலாது, பரிசோதனையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படுவர் எனவும், மற்றவர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுங்கச்சாவடி பணியாளர் சங்கம் சார்பிலும் வாகன வசூலை நிறுத்தி, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தினர்.

நிர்வாகத்தின் பதிலை ஏற்க மறுத்த வட்டாட்சியர், சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி, பணியாளர்களை தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக பயணிக்கின்றன.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் முதல் 45 லட்சம் வரை வசூலாகும். கரோனா பரவலுக்குப் பின் வசூல் குறைந்து ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் முதல் 6 லட்சம் வரை வசூல் குறைந்திருப்பதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in