

அதிமுக ஆட்சியில் முதலீடு செய்ய உகந்த மாநிலம் என்ற பெயரைத் தமிழகம் இழந்துவிட்டது என்றும், தமிழகத்தின் வேலையில்லாப் பிரச்சினை தேசிய சராசரியைவிட இருமடங்காக உயர்ந்துவிட்டது என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் பொன்.முத்துராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்.முத்துராமலிங்கம், மாநிலத்தில் குறைந்து வரும் முதலீடு மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து இன்று காணொலிக் காட்சி வாயிலாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
’’முதலீடு செய்ய உகந்த மாநிலமாக திகழ்ந்த தமிழகம், மோசமான ஆட்சியாலும், முறைப்படுத்தப்படாத திட்டங்களாலும் அந்தப் பெயரை இழந்திருக்கிறது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் இடைக்கால அறிக்கையில், முதலீடு செய்ய உகந்த 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இதனால் மாநிலத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் சரிவுக்குள்ளாகும்.
மாநிலத்தின் பொருளாதாரத்தில் சேவைத்துறை 45 சதவீதமும், உற்பத்தித்துறை 34 சதவீதமும், வேளாண்மை 21 சதவீதமும் பங்காற்றி வருகிறது. முதலீட்டைப் பொறுத்தவரை அரசாங்கம் 52 சதவீதமும், இந்திய தனியார் நிறுவனங்கள் 29.9 சதவீதமும், வெளிநாட்டில் இருந்து 14.9 சதவீதமும் கிடைக்கின்றன. ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மோசமான ஆட்சியாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் முதலீடு குறைந்து, தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கையின்படி, தமிழகம் முதலீட்டை ஈர்க்கும் பட்டியலில் தொடர்ந்து பின்னடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, 43.5 சதவீதமாக இருந்த தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரலில் 49.8 ஆக உயர்ந்துள்ளது. தேசிய வேலையின்மை விகிதம் வெறுமனே 23.5 சதவீதம்தான். ஆக, தேசிய சராசரியைவிட இரு மடங்கு வேலையின்மை விகிதத்துடன், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதே மோசமான நிலை தொடர்ந்தால், வேலையில்லாப் பிரச்சினை பூதாகரமாகி தமிழகத்தில் வறுமையும், நமது இளைஞர்கள் பிற மாநிலங்களில் வேலை தேடிச் செல்லவேண்டிய நிலையும் ஏற்படும்.
2016-2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஈர்க்கப்பட்ட ரூ.3.95 லட்சம் கோடியில் தமிழகம் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீட்டை மட்டுமே பெற்றது. காரணம், அப்போது மாநிலத்தில் நிலவிய நிலையற்ற அரசியல் சூழ்நிலை. மாநிலத்தின் கடன் சுமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், ஆண்டிற்கு 12.4 சதவீதம் வரை உயரந்து, கடந்த பத்தாண்டுகளில் நான்கு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, கடனுக்கு இணையாக அதிகரிக்கவில்லை.
2006 - 2011 ஆண்டில் 10 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் வெறும் 6.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் முதலீட்டை ஈர்த்து, அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்’’.
இவ்வாறு பொன்.முத்துராமலிங்கம் கூறினார்.