

வரும் 21-ம் தேதி 5,000 இடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தவது என திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (ஜூலை 17) நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும். அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார். நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் பரணி கே.மணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, சட்டத்துறை இணைச்செயலாளர் என்.மணிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், "கரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், உண்மையை நிலையை மூடி மறைக்கும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதிமுக அரசு அதனை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்குவதை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும்.
இயங்காத தொழிற்சாலைகளுக்கு 4 மடங்கு கட்டணம் வந்துள்ளது. சீரான மின் கணக்கீடு செய்யாததை கண்டிக்கிறோம். மின் நுகர்வோருக்கு சாதகமான நிலையில் கணக்கிட்டு, ஊரடங்கு நேரத்தில் மின் கட்டணத்தை குறைக்கக்கோரியும், குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை சுலப மாதத்தவணையில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக்கோரி வரும் 21-ம் தேதி மாவட்டத்தில் 5,000 இடங்களில் கருப்புக்கொடி கட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராடுவது.
அனுமதி இல்லாத மதுபான கடைகள், சட்டவிரோத பார்கள் நடத்துதல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், காவிரி, அமராவதி ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனங்கள்.
மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும்"
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.