கரூர் மாவட்டத்தில் 3 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா
கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு நேற்று (ஜூலை 16) கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை 17) வெளியாகின. இதில், கரூர் பாலம்மாள்புரத்தைச் சேர்ந்த 18 வயது, பாலவிடுதியைச் சேர்ந்த 20 வயது, தரகம்பட்டியைச் சேர்ந்த 32 வயது என 3 கர்ப்பிணிகளுக்கு ஒரே நாளில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மேலும், 23 வயது டாஸ்மாக் ஊழியர், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த 30 வயது பெண், காந்திகிராமத்தைச் சேர்ந்த 35 வயது, வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த 38 வயது ஆண்கள் என மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதியானது. இதையடுத்து 3 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 7 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டு ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், கரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல், சளி பரிசோதனை நடத்தப்பட்டன.
