

முகக் கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அதைத் தங்கத் தட்டில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்திருக்கிறது கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள 108 சிவாலயம் அருகில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தார் சார்பில் இன்று கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் திருக்கூட்ட அன்பர்கள் சிவனடியார்கள் என 10 பேர் மட்டும், தனி மனித இடைவெளியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், கரோனா களத்தில் மருத்துவ, சேவை மற்றும் மீட்புப்பணிகளில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது முன்களப் பணியாளராக பணியாற்றி வரும் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி பொதுமக்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கடலை மிட்டாய், கபசுரக் குடிநீர் மற்றும் அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, பலாப்பழம், பேரீட்சை, திராட்சை உள்ளிட்ட பழங்களுடன் சர்க்கரை கலந்த பழ -பஞ்சாமிர்தக் கலவையும் வழங்கப்பட்டது.
அத்துடன் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக பாபநாசம் பகுதியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டன.
இது குறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய திருவடிக்குடில் சுவாமிகள், "கரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டியும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கியும் பிரச்சாரம் செய்து வருகிறோம். முகக்கவசத்தைத் தங்கத் தட்டில் வைத்து கொடுக்கும்போது அது மக்களிடம் கூடுதல் கவனத்தை பெறுகிறது. அதனால்தான் தங்கத் தட்டில் வைத்து கொடுத்தோம்.
இப்போதைய சூழ்நிலையில் தேவை அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மட்டுமல்ல, தன்னார்வலர்களுடன் இணைந்த கூட்டுப்பிரச்சாரம் தான். அரசாங்கம் செய்யும் விழிப்புணர்வு மட்டுமே பொது மக்களிடம் முழுமையாகச் சென்று சேர வாய்ப்பில்லை. எனவே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு உரிய அனுமதியை தமிழக அரசு வழங்கவேண்டும்.
அரசு அனுமதி தருமானால் எந்தவித இடையூறுமில்லாமல் விழிப்புணர்வுச் செயல்பாடுகளை தன்னார்வலர்கள் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அது கரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்குப் பேருதவியாக இருக்கும்” என்றார்.