

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் ரோசன்பேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் கரோனா தொற்றுநோயைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. திமுக என்றாலே வன்முறை கலாச்சாரம் தான் என்பது நாடே அறிந்தது. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தொற்றை தடுக்கும்விதமாக சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறையும்பட்சத்தில் பொதுமக்கள் நன்மையை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும்.
இ-பாஸ் முறையில் எவ்வித முறைகேடுகளும் இல்லாத அளவுக்கு அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அரசுடன் கலந்து ஆலோசித்து மேலும் எளிய முறையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்றார்.