

புதுச்சேரியில் தனவேலுவை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு இன்று கடிதம் அனுப்பினர்.
பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்., பிரமுகராக இருந்த தனவேலு, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். தொடர்ந்து பாப்ஸ்கோ தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
முதல்வர், அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து சட்டப்பேரவையில் பேசத்தொடங்கினார். அத்துடன் தனது தொகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இல்லை என்று போராட்டம் நடத்தினார். பின்னர் ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பேசினார். இதனால் முதல்வர் உள்ளிட்டோர் மேலிடத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தனவேலு மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்தனர். அதன்பேரில், கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ், தனவேலுவை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் சிவக்கொழுந்து, பாகூர் தொகுதி காலியாக உள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார். அதனைக் கண்டித்து தனவேலுவின் ஆதரவாளர்கள் பாகூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பாகூரில் தனவேலுவின் ஆதரவாளர்கள் எம்எல்ஏ பதவியில் இருந்து அவரை நீக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி கடிதங்களை இன்று (ஜூலை 17) தபால் மூலம் அனுப்பினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், "பாகூர் தொகுதியில் கடந்த 2016-ல் வாக்களித்தோம். கட்சி தாவல் தடை சட்டம் என கூறி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவை நீக்கியுள்ளனர். தேர்தல் நடத்தி தேர்தல் ஆணையம் மூலம் மக்களால் தேர்வானவரை எதற்காக அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் இணைத்து கேள்வி எழுப்பி அனுப்பியுள்ளோம்.
இதேபோல், குடியரசுத்தலைவருக்கும் அனுப்ப உள்ளோம். அடுத்தக்கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி தருவோம். இதன் மூலம் தேர்தல் நடைமுறையின் மீதே மக்கள் அதிருப்தி எழ வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.