

தன்னை விமர்சித்தவர்களுக்கு எழுதுபவர்களுக்கு பேனாவை கொடுத்தவர் பெரியார், சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் என கோவை பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் அச்சம்பவத்தை கண்டித்துள்ளார்.
கோவைகோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய பெரியார் சிலை மீது நேற்றிரவு சில விஷமிகள் காவி சாயத்தைப் பூசிவிட்டுச் சென்றனர். சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்ட அவர்களை கைது செய்யவேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச்சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
“என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
அதனால் அவர் பெரியார், சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.