ஆட்டோவில் கடத்த முயன்றபோது ஓட்டுநரின் கையை கடித்து சாதுர்யமாக தப்பிய சிறுமி

ஆட்டோவில் கடத்த முயன்றபோது ஓட்டுநரின் கையை கடித்து சாதுர்யமாக தப்பிய சிறுமி
Updated on
1 min read

சென்னையில் தன்னைக் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் கையைக் கடித்து சாதுர்யமாகத் தப்பிய 11 வயது சிறுமியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் தனது வீடு அருகே உள்ள கடைக்கு கடந்த 14-ம் தேதி சென்று திரும்பினார்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிக் கடத்த முயன்றுள்ளார். இதை எதிர்பாராத சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமி முகத்தில் மயக்க மருந்து தெளிக்க முயன்றுள்ளார். அதற்குள் சுதாரித்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் கையைக் கடித்து விட்டுத் தப்பினார். இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநரும் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆய்வாளர் திவ்யகுமாரி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

முதல் கட்டமாக அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ எண்ணை அடையாளம் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், சிறுமியை கடத்த முயன்றதாக சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த ஹரிபாபுவை (24) நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து சாதுர்யமாகத் தப்பிய சிறுமியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in