3 பேரை கொன்று புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை

3 பேரை கொன்று புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை
Updated on
1 min read

விழுப்புரம் அடுத்த எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மெத்தை வியாபாரி முருகன்(45), தொழில் ரீதியாக நண்பரான நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த சேகர் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது, சேகர் மகள் லாவண்யாவுடன்(17) முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் லாவண்யாவை கடந்த 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தால் கோபத்தில் இருந்த சேகரை முருகனும், சிலம்பரசனும் சேர்ந்து கொன்று உடலை புதைத்தனர். சில நாட்களில், இதையறிந்த லாவண்யாவையும் கொன்று உடலை புதைத்தனர். தொடர்ந்து, சிலம்பரசனால் தனக்கு தொல்லை வரலாம் எனக் கருதிய முருகன், அவரையும் கொன்று புதைத்தார். இதற்கு முருகனின் தம்பி மதியரசனும், அவரது நண்பர் மூர்த்தியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவை அனைத்தும், முருகனின் மகள் டிவிக்கு அளித்த பேட்டியால் தெரியவந்தன. இதையடுத்து, 2012-ல் தனிப்படை போலீஸார், கொல்லப்பட்ட 3 பேரின் எலும்புக் கூடுகளை தோண்டியெடுத்தனர். முருகன், மதியரசன், மூர்த்தி, முருகனின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இவர்களில் மூர்த்தி இறந்துவிட்டார். விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து, நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

முருகனுக்கு 3 ஆயுள் தண்டனை (தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்), ரூ.75 ஆயிரம் அபராதம், மதியரசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் ராஜேஸ்வரி விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in