Published : 17 Jul 2020 07:10 AM
Last Updated : 17 Jul 2020 07:10 AM

ஊரடங்கு காலத்திலும் முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகம் முதலிடம்: 3 மாதங்களில் ரூ.18,236 கோடி திட்டங்களுக்கு அனுமதி

ஊரடங்கு காலத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதியளித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா பாதிப்பால் உலகஅளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் காரணமாக, பல நாடுகளில் இருந்து பெரு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இந்த முதலீடுகள் தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களுக்கு ஈர்க்கப்படுகின்றன.

தமிழக முதல்வரும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலீடு செய்ய வரும்படி கடிதம் எழுதி வருகிறார். ஊரடங்கு காலத்திலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய அளவில் ஊரடங்குகாலத்தில் ஈர்க்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட முதலீடுகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான காலத்தில் தேசிய அளவில்மொத்தம் ரூ.97 ஆயிரத்து 859 கோடிமதிப்பிலான 1,241 புதிய திட்ட முதலீடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 852 கோடியே 82 லட்சம் மதிப்பிலான, 5 ஆயிரத்து 493 திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதில் ரூ.31 ஆயிரத்து 418 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 738 சுரங்க திட்டங்களுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

18.63% முதலீடு

இதில் தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 3 மாதங்களில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கு அனுமதியளித்து முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவில் 18.63 சதவீதமாகும்.

முதலீட்டு நிறுவனங்கள்

அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா 12 ஒப்பந்தங்களுடன் 90 புதிய திட்டங்கள் அடிப்படையில் ரூ.11 ஆயிரத்து 228 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் ரூ.8 ஆயிரத்து 867 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, இயந்திர உற்பத்திப் பிரிவில் காற்றாலை மின்உற்பத்திக்கான இயந்திர உற்பத்தியில் ரூ.2,000 கோடியை விவிட் சோலாயர் எனர்ஜி நிறுவனமும், செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காக ரூ.900 கோடியை பாலிமாடெக் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் முதலீடு செய்கின்றன. ஆட்டோமொபைல் பிரிவில், டெய்ம்லர் நிறுவனம் ரூ.2 ஆயிரத்து 277 கோடி மதிப்பில் வர்த்தக வாகனம் தயாரிப்பதற்கான முதலீட்டை மேற்கொள்கிறது.

எரிவாயு மின்சாரம்

அதேபோல், மின் உற்பத்திப் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ரூ.3,000 கோடி மதிப்பில் 750 மெகாவாட் திறனுடன் மிகப்பெரிய எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பிரிவை சென்னை பவர் ஜெனரேஷன் நிறுவுகிறது. இதுதவிர மேலும் சில பிரிவுகளிலும் தமிழகத்தில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x