Published : 17 Jul 2020 06:54 AM
Last Updated : 17 Jul 2020 06:54 AM

மத்திய அரசின் அவசர கடன் உறுதி திட்டத்தின் கீழ் பிணை இன்றி கடன் வழங்க வங்கிகள் மறுப்பு: தொழில் நிறுவனங்கள் ஏமாற்றம்

கரோனா பரவலால் முடங்கியுள்ள தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு அறிவித்துள்ள அவசர கடன் உறுதி திட்டத்தின் கீழ், பிணை இன்றி கடன் வழங்கவங்கிகள் மறுப்பதால் தொழில் நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

கரோனா பரவலால் முடங்கியுள்ள நிறுவனங்களை பாதுகாக்கஅவசர கடன் உறுதி திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒரு தொழில் நிறுவனம் பெற்ற கடனில், இனி செலுத்த வேண்டிய தொகையில் 20 சதவீதத்தை கூடுதல் கடனாக பெறலாம். அதற்கு அந்த தொழில் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மிகாமல் வருவாய் ஈட்டி இருக்க வேண்டும். ரூ.25 கோடிக்கு மிகாமல் கடன் பெற்று, கடந்த பிப்ரவரி 29-ம் தேதிக்கு முன் 60 நாட்கள் வரை முறையாக கடன் தவணை செலுத்தி இருக்க வேண்டும். இக்கடனைப் பெற பிணை கேட்கக் கூடாது என மத்தியஅரசு அறிவுறுத்தியும் வங்கிகள்பிணை கேட்பதால் தொழில் நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளர் எஸ்.பாலாஜி கூறியதாவது: இத்திட்டத்தின்கீழ் பெறும் கடனுக்கு பிணை கேட்கக் கூடாது. ஆனால் பலவங்கிகள், ஒரு கடனுக்கு ஏற்கெனவே வழங்கிய பிணையை இக்கடனுக்கும் சேர்க்கின்றனர். அடமான பத்திரமாக பதிவுத்துறையில் மீண்டும் பதிவு செய்கின்றனர். இது கூடுதல் நேரம் மற்றும் பண விரயத்தை ஏற்படுத்துகிறது.

இக்கடனை ஓராண்டுக்கு செலுத்த தேவையில்லை. ஆனால் கடனை செலுத்துமாறு வங்கிகள் நிர்ப்பந்திக்கின்றன. எனவே பிணைஇன்றி கடன் வழங்க வேண்டும். ஓராண்டு வரை கட்ட நிர்ப்பந்திக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (TANSTIA) முன்னாள் பொதுச் செயலர் சி.கே.மோகன் கூறும்போது, “பெரும்பாலான வங்கிகள், ஏற்கெனவே கொடுத்த பிணையை இணைக்காமல் இந்த கடனை கொடுப்பதில்லை. பிப்ரவரி 29-ம் தேதிக்கு முன்பு 60 நாட்கள் வரை கடன் தவணை செலுத்தியவர்களுக்கு தான் இந்த கடன் கிடைக்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனாலேயே பலருக்கு இந்த கடன் பெற தகுதி இல்லாமல் போகிறது” என்றார்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோவிடம்கேட்டபோது, “இந்த கடன் பெறமீண்டும் பிணையை இணைக்கக்கூடாது. அப்படி இணைத்தால் அதுதவறு. அது குறித்து ரிசர்வ் வங்கி,மத்திய நிதி அமைச்சகத்துக்குதொழில் நிறுவனங்கள் புகார் தெரிவிக்கலாம்“ என்றார்.

மாவட்ட முன்னோடி வங்கியின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இத்திட்டம் மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக செயல்படுத்தப்படவில்லை. நேரடியாக வங்கி மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையே செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் மாவட்டஆட்சியர் தலைமையில் தொழில்நிறுவன பிரிதிநிதிகளுடனான கூட்டம் நடத்தி இத்திட்டம் தொடர்பான குறைகளை கேட்டறிந்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x