Published : 16 Jul 2020 09:43 PM
Last Updated : 16 Jul 2020 09:43 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு; முதல்வரை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரண வழக்கு தொடர்பாக பொய்யான தகவலை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ராஜராஜன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, வழக்கறிஞர் ராஜராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரண வழக்கு தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக பொய்யான தகவலை முதல்வர் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் செயலாகதான் இதைக் கருத வேண்டும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது எனத் தெரிவித்து தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே. பிராபகர் சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க மறுத்ததோடு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x