

மதுரையில் இன்று ஒரே நாளில் 267 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,534 நோயாளிகள் குணமடைந்து வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் ‘கரோனா’ தொற்று வேகமாக பரவினாலும் அதற்கு இணையாக நோயாளிகள் குணமடைவதும் அதிகரித்துள்ளதால் தற்போது இந்த நோய் பற்றிய பதட்டம் மக்களிடம் குறைந்துள்ளது.
முன்பு போல் இந்த நோய் வந்தால் முடங்கி மனம் உடைந்துவிடால் தற்போது தைரியமாக எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மதுரையில் தினமும் சராசரியாக 300 பேருக்கு பரவும் நிலையில் இன்று புதிதாக 267 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனளிக்காமல் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து இதுவரை 134 பேர் இறந்துள்ளனர். இன்று மாலை வரை 4,534 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மதுரையில் இன்று ஒரே நாளில் மட்டும் 679 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டாலும் மதுரையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை மற்றொரு புறம் அதிகரிக்கிறது.
இந்த நோய் வரும் பெரும்பாலானோருக்கு தற்போது முதல் 2 நாள் மட்டுமே லேசான அறிகுறி தென்படுகிறது. அதன்பிறகு அறிகுறி இல்லாமல் மிகச் சாதாரணமாகவே உள்ளனர். விரைவில் குணமடைந்தும் விடுகின்றனர்.
அதனால், நோயாளிகள் தற்போது மருத்துவமனைகளுக்குச் செல்வதை காட்டிலும், வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு சிகிச்சைப்பெற ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழப்பு பெரும்பாலும் முதியவர்களுக்கே ஏற்படுகிறது. அவர்களையும் கடைசிநேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாலும், அவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு நோய்கள் இருந்து அதற்கும் சிகிச்சைப்பெறாமல் ‘கரோனா’ வந்ததால் அவர்கள் இறப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதனால், மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி மிகுந்த மனவலிமையுடன் இந்த நோயை எதிர்கொண்டால் நிச்சியமாக இந்தத் தொற்று நோய் வந்ததும், போனதும் தெரியாமல் நோயாளிகளை குணமடையச் செய்யும் என்று இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தருகின்றனர்.