

தனிப்பட்ட ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு திறனை ரேபிட் கருவியை பயன்படுத்தி பரிசோதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டியது அவசியம். பிசிஆர் பரிசோதனை அதிக செலவாகிறது. மேலும் பிசிஆர் கருவிகள் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டும் இருப்பதால் அனைவரையும் பரிசோதிப்பதில் சிரமம் உள்ளது. அதற்கு பதிலாக ரேபிட் கருவிகளை பயன்படுத்தி அனைவரையும் பரிசோதிக்கலாம்.
நோய் எதிர்ப்ப குறைவாக உள்ளவர்களையும், தொற்றிலிருந்து மீண்டு வருவோரை 2-ம் முறை பரிசோதனைக்கும் பிஆர்சி கருவியை பயன்படுத்தலாம்.
எனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்கி ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஜூன் 16-ல் ரேபிட் கருவி பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
அரசு தரப்பில், நோய்த் தொற்றை உறுதி செய்யும் முறையான பரிசோதனையாக பிசிஆர் சோதனை மட்டுமே உள்ளது என ஜூன் 23-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், மனு தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.