கரோனா ஊரடங்கால் ஆடித் திருவிழாக்கள் ரத்து; வெல்லம் விலை கடும் சரிவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனாவால் ஆடித் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெல்லம் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், புதுச்சேரியில் முக்கியமாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழாக்களை நடத்த அரசிடம் பலரும் அனுமதி கோரியிருந்தனர்.

இச்சூழலில் இந்து சமய நிறுவனங்கள் ஆணையர் சிவசங்கரன் பிறப்பித்துள்ள உத்தரவில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு நடப்பாண்டு கோயில்களில் ஆடித் திருவிழா, இம்மாதத்தில் நடக்கும் திருவிழாக்கள், மற்றும் தேர்த் திருவிழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

திருவிழாக்கள் ரத்தால் சரியும் வெல்ல விலை

ஆடி மாதத்தையொட்டி புதுச்சேரியில் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும். தற்போது அவை நடைபெறாது என்பதால் வெல்லம் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வெல்ல உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம், சந்தைப்புதுக்குப்பம், ஆண்டியார் பாளையம் போன்ற பல கிராமங்களில் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம், புதுச்சேரி தொடங்கி திருவண்ணாமலை, சேலம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆடி மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக வெல்லம் ஆர்டர் அதிக அளவில் வரும். ஆனால், தற்போது கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது கோயில்கள் திறக்கப்பட்டிருந்தாலும், ஆடி மாதத்திற்கான திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஆடி மாதங்களில் ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ வெல்லம் மூட்டைகள், இந்த ஆண்டு விலை மிகவும் சரிந்து ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு போன்று ஆர்டர்களும் சரியாக வருவதில்லை. இதனால், நாட்டு வெல்லம் தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டு வருவதுடன், இனிப்பான பொருளைத் தயார் செய்யும் எங்களின் வாழ்க்கை இந்த ஆண்டு கசப்பாக மாறியுள்ளது" என்கின்றனர்.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in