

கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த எலச்சிபாளையத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புது முயற்சியாக ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 60-க்கும் மேற்பட்ட தெருக்கூத்துக் கலைஞர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். கோயில் திருவிழா சமயங்களில் இக்கலைஞர்கள் தெருக்கூத்து நடத்துவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, கோயில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எலச்சிபாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதைப் போக்கும் வகையில் தெருக்கூத்துக் கலையை 'சுபிக்ஷம்' என்ற பெயரில் ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டு, பிள்ளையார் சுழியும் போட்டுள்ளனர். இப்புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்திருப்பது தெருக்கூத்துக் கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எலச்சிபாளையத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் வ.ராம் கூறியதாவது:
"திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம், எலிமேட்டில் தெருக்கூத்துக் கலைஞர்கள் உள்ளோம். 7 தலைமுறையாக தெருக்கூத்து நடத்தி வருகிறோம். சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை என கொங்கு மண்டல மாவட்டம் மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் தெருக்கூத்து நடத்தச் செல்கிறோம்.
மகாபாரதம், ராமாயணம், சிவபுராணம், மதுரை வீரன் போன்ற புராணக் கதைகள், குடும்பக் கதைகள் உள்ளிட்டவற்றைத் தெருக்கூத்தாக நடத்தி வருகிறோம். கோயில் திருவிழா மட்டுமின்றி இறப்பு நிகழ்ச்சி போன்றவற்றிலும் தெருக்கூத்து நடத்துகிறோம். தெருக்கூத்து தொடர்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளித்துள்ளோம்.
எங்களிடம் பயிற்சி பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடந்த போட்டியில் தெருக்கூத்துப் பிரிவில் 2-ம் இடம் பிடித்தனர். தனியார் அமைப்பு, அரசு சார்பில் விருது பெற்றுள்ளோம். கரோனா ஊரடங்கால் தொழில் வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதை எப்படிச் சமாளிப்பது என ஆலோசனை செய்தபோது 'கூகுள் மீட்' மூலம் ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தலாம் என முடிவு செய்து கடந்த 12-ம் தேதி தொடங்கினோம்.
இது தொடர்பாக முகநூல், இன்ஸ்டகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தோம். முதல் நாளே மக்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்தது. ஆன்லைனில் தெருக்கூத்து பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் சிறு கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் ஏராளமான பார்வையாளர்கள் எங்களது தெருக்கூத்தை ஆன்லைனில் கண்டு ரசித்தனர்.
'சுபிக்ஷம்' என்ற பெயரில் ஆன்லைனில் நடத்தினோம். சுவாமி விவேகானந்தர் இளையோர் கலை மற்றும் சமூக மேம்பாட்டு மையம் என்பதன் சுருக்கம் தான் 'சுபிக்ஷம்'. இந்த மையம் சார்பில் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறோம். ஊரடங்கு காலத்தில் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். தெருக்கூத்து நடத்தும் குழுவில் 7 ஆண் பட்டதாரிகள், இரு பெண் பட்டதாரிகள் உள்ளனர். பல தலைமுறையாக தெருக்கூத்து நடத்தி வருவதுடன், தமிழகத்தின் பாரம்பரியக் கலை என்பதால் படித்துப் பட்டம் பெற்றாலும் தெருக்கூத்தை விடாமல் நடத்தி வருகிறோம்".
இவ்வாறு தெருக்கூத்துக் கலைஞர் ராம் தெரிவித்தார்.