Published : 16 Jul 2020 07:04 PM
Last Updated : 16 Jul 2020 07:04 PM

அரசு கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாக ஜூலை 20-ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்விப் பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்புக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்பொழுது முதல்வர் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tndceonline.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதேபோன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் வரும் 20.07.2020 தேதி முதல் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014, 044-22351015 தொடர்பு கொள்ளவும்”.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x