

தூத்துக்குடியில் விளைநிலம் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை கண்டித்து கிராமமக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் சார்பில் 142 கிமீ தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் பாதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக இந்த எரிவாய் குழாய் பதிக்க விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விளைநிலங்கள் வழியாக இல்லாமல் மாற்று வழியில் குழாய் பதிக்க வேண்டும் என இக்கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து பொட்டல்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கடந்த 2 நாட்களாக கறுப்பு கொடி கட்டியிருந்தனர்.
இந்நிலையில் பொட்டல்காடு கிராம மக்கள் ஊர்த்தலைவர் செல்வசேகர், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் இன்று கிராமத்தின் மையப்பகுதியில் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிராமத்துக்குச் செல்லும் அனைத்து பாதைகளையும் போலீஸார் மூடி, கிராமத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கிராம மக்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
பேச்சுவார்த்தை பலனளிக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றுவிட்டனர். பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.