சிதம்பரம் அண்ணாமலை நகரில் 110 நாளாக இலவச கபசுரக் குடிநீர் வழங்கி வரும் பொறியாளர்

இலவசமாக கபசுரக் குடிநீரை வழங்கிவரும் பொறியாளர்.
இலவசமாக கபசுரக் குடிநீரை வழங்கிவரும் பொறியாளர்.
Updated on
1 min read

சிதம்பரம் அண்ணாமலைநகரில் பொறியாளர் ஒருவர் 110 நாளாக இலவச கபசுரக் குடிநீரை வழங்கி வருகிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் ரவி (53). இவர் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள முத்தையா நகரில் குடியிருந்து வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இவர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள பூமா கோயில் அருகே கடந்த 110 நாட்களாக ஊரடங்கு இருந்துவரும் நிலையில் காலை, மாலை என இரண்டு வேளையும் கபசுரக் குடிநீர் வைத்துவிட்டு அதன் அருகிலேயே குடிநீர் கேனையும் வைத்துள்ளார்.

மேலும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், கபசுரக் குடிநீரைக் குடித்துவிட்டுச் செல்வதற்கு ஏற்றவாறு பேப்பர் கப், நாட்டு சர்க்கரை, கைகளில் போட்டுக் கொள்ள பாரம்பரிய கிருமிநாசினியான மஞ்சள் பொடி, சானிடைசர் ஆகியவற்றை வைத்துள்ளார். அருகிலேயே குப்பைத் தொட்டியும் வைத்துள்ளார். பின்னர் குப்பைத் தொட்டியில் உள்ள பேப்பர் கப்புகளைக் குப்பையில் கொட்டி வருகிறார்.

கடந்த 110 நாளாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் இந்த கபசுரக் குடிநீரை குடித்துச் செல்கின்றனர். ரவி செய்து வரும் தன்னலமில்லா சமூகப் பணியை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டிச் செல்கின்றனர்.

இதுகுறித்து ரவி கூறுகையில், "கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையிலும், கரோனா வைரஸ் தொற்று ஒழிப்பில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன்.

ஒரு நாளைக்குக் காலை, மாலை என சுமார் 90 லிட்டர் கபசுரக் குடிநீரை இப்பகுதி மக்கள் குடித்து வருகின்றனர். இது எனக்கு மன நிம்மதியையும், நோய் ஒழிப்பில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in