Last Updated : 16 Jul, 2020 05:17 PM

 

Published : 16 Jul 2020 05:17 PM
Last Updated : 16 Jul 2020 05:17 PM

கரோனா சிகிச்சை: சு.வெங்கடேசனின் தாயாரும் தங்கையும் குணமடைந்து வீடு திரும்பினர்

மதுரை மைந்தரான அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மனைவி ஆகியோர் கரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசனின் தாய் நல்லம்மாள், தங்கை லட்சுமி ஆகிய இருவரும் கடந்த வாரம் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள். மதுரை தோப்பூரில் உள்ள நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள், தற்போது குணமாகி உள்ளனர். பரமக்குடி அதிமுக எம்எல்ஏவான சதன் பிரபாகரனுக்குப் பிறகு, கரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்த மக்கள் பிரதிநிதியின் குடும்பம் இது.

இதுபற்றி சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, "எனது தாய்க்கு 67 வயது. நாள்பட்ட சர்க்கரை நோயாளி; ரத்த அழுத்தமும் உண்டு. எளிதில் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளவர். தங்கைக்கு வயது 47. அவரும் சர்க்கரை நோயாளிதான். இருவருக்கும் கரோனா தொற்று என்றதும் குடும்பமே சற்று ஆடிப்போனது.

சிகிச்சைக்கான நடவடிக்கைகளை யோசித்த போதுதான் அத்தனை பிரச்சினைகளும் முன்னால் வந்து நின்றன. காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் எவையுமில்லை. எனவே, வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா என்று யோசித்தால் தாயாரின் வயதும் நாள்பட்ட நோய்த் தாக்கம் கொண்டவராகவும் இருப்பதால் அது சரியான முடிவல்ல என்று கைவிட்டோம்.

அப்பொழுதுதான் தோப்பூரில் இருக்கும் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் காந்திமதிநாதனும் மருத்துவர் இளம்பரிதியும் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினர். எனவே தாய், தங்கை இருவரையும் தோப்பூர் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனையில் சேர்த்தோம்.

அங்கு ஒன்பது நாள்கள் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் பலனாக இன்று இருவரும் முழுநலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மிக நல்ல சிகிச்சை அளித்து இருவரையும் குணப்படுத்தியதற்காக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கரோனோ தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் இதுபோன்ற நல்லதொரு சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழலை முழுமையாக உருவாக்கவே பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைக் கையாள்வதில் தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவர்கள் திறனும் அனுபவமும் அதிகம் பெற்றவர்கள். எனவே, கரோனோ போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான போரில் அரசு மருத்துவமனைகள் மிகச்சிறப்பான பங்களிப்பினைச் செய்யமுடியும்.

பல்வேறு வகையான போதாமைகளுக்கு நடுவிலும் மிகச்சிறப்பாக பங்காற்றிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x