

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்து தீவிரமடைந்துவரும் நிலையில் பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை உள்ளிட்ட நகரங்களில் முழுமையாக கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவுசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து 1066 ஆக இருந்தது. தொடர்ந்து தினமும் 157, 119 என நூறு நபர்களைக் கடந்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கரோனா தொற்று பாதிப்பால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஜூலை 16 முதல் 21 ம்தேதிவரை ஒட்டன்சத்திரம் நகரில் கடைகளை முழுமையாக அடைக்க முடிவு செய்து செயல்படுத்திவருகின்றனர். ஜூலை 22 முதல் 31 ம் தேதி வரை மாலை 3 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கவும் முடிவு செய்துள்ளனர்.
பழநியில் கரோனா தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த பழநி நகர் முழுவதும் வணிகநிறுவனங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் அசோகன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் ஜூலை 17 முதல் 23 ம் தேதி வரை முழுமையாகக் கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் ஜூலை16 முதல் 26 ம் தேதிவரை கடைகளை முழுமையாக அடைக்க வணிகர்கள் முடிவு செய்து, கடைகளை அடைத்துள்ளனர். எரியோடு பகுதியில் ஜூலை 21 ம் தேதி வரை முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது.
நத்தம் தாலுகா முழுவதும் ஏற்கனவே முழு கடையடைப்பு நடைமுறையில் உள்ளது.
வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.