

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், இவர்கள் பணியைத் தொடரமுடியாத நிலையில், சிகிச்சையளிக்கும் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் 200 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய கரோனா சிகிச்சை வார்டு உள்ளது. மேலும் பிற நோய்களுக்கு இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கரோனா வார்டு பணியில் இருந்த மருத்துவர்கள் இருவருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்றும் ஒரு மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதுமட்டுமல்லாமல், 10 செவிலியர்கள், மருத்துவமனை வார்டுகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 8 பேர், தொழில்நுட்ப உதவியாளர்கள் 2 பேர் என மொத்தம் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 5 மருத்துவர்கள், செவிலியர்கள் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்நிலை உருவாகியுள்ளதால் சிகிச்சையளிக்கும் பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.