

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத வகையில் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், அரசு, மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர் என கிராமம், நகரம் வாரியாக மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 24 மணி நேரத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது.
கரோனாவால் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மருதங்கோட்டை சேர்ந்த 70 வயது முதியவர், காட்டாத்துறையைs சேர்ந்த 68 வயது பெண் ஆகியோர் மரணம் அடைந்தனர்.
இதனால் குமரி மாவட்டத்தில் கரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 பேராக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 1000 பேருக்கு மேல் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதால் புதிதாக வருவோருக்கு படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.