Published : 16 Jul 2020 04:16 PM
Last Updated : 16 Jul 2020 04:16 PM

நீட் மருத்துவப் படிப்பு: 7.5% உள் ஒதுக்கீட்டில் உள்ள குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

நீட் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 % உள்ஒதுக்கீடு, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்கள் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:

''அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்வியில் சேரமுடியாமல் இருந்த நிலையில் அம்மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் பொன் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் 100% மருத்துவக் கல்வி வாய்புகளைத் தட்டிப்பறித்து பிற மாநில, CBSE கல்விமுறை மாணவர்களுக்கும் வழங்கி, அரசு அநீதி இழைத்துள்ளது.

இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பதிலும் பல குளறுபடிகள், ஆள்மாறாட்டம், மதிப்பெண் திருத்தம் போன்ற முறைகேடுகளும் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நீட் தேர்வை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு மருத்துவச் சேர்க்கை நடத்தவேண்டும் என்பதே மாணவர்கள் பெற்றோர்களின், கோரிக்கையும் ஆகும். நூறு விழுக்காடு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தற்போது அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5% விழுக்காடு மிகக் குறைவானது என்றாலும், தமிழக அரசின் சிந்தனையில் கருணை ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த 7.5% உள்ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து அதன்பின் 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களும் இந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வாய்ப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி என்பது, தமிழகத்தில் கடந்த 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. 2010 ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் தற்போது பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தே மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது .

இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு முதலில் அரசுப் பள்ளிகளில் படித்து பின்னர் தனியார் பள்ளிகளில் சமச்சீர்/ சிபிஎஸ்இ பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுமா என ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் 69% இட ஒதுக்கீட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள குறைவான கல்விக் கட்டண அரசு கல்வி இடங்கள் தங்களுக்குக் கிடைக்காதா என்ற அச்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போதைய குழப்பமான அறிவிப்பு மேலும் பல குளறுபடிகளை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு ஏற்கெனவே இட ஒதுக்கீட்டு சுழற்சி கடைப்பிடிப்பதில் நடைபெறுகின்ற, குளறுபடிகளைச் சீர்படுத்துவதுடன் இந்த தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயின்ற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு முறையைத் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையினை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து ஆவன செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x