சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரி 3-வது நாளாக விசாரணை- கோவில்பட்டி சிறைக் காவலர்கள் சாட்சியம்

தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கோவில்பட்டி சிறை காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி குமார் விசாரணை நடத்தினார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கோவில்பட்டி சிறை காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி குமார் விசாரணை நடத்தினார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரி மூன்றாவது நாளாக இன்று கோவில்பட்டி சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் கடந்த 3 நாட்களாக தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் நாள் சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவர்களது கடைக்கு அருகேயுள்ள கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலரும், வழக்கில் முக்கிய சாட்சியுமான ரேவதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்தார்.

2-ம் நாளான நேற்று தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் பாலசுப்ரமணியன், வெங்கடேஷ், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணை அதிகாரி குமார் தனது விசாரணையை தொடர்ந்தார்.

கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறைக் காவலர்கள் வேல்முருகன், செந்தூர்ராஜா, மாரிமுத்து மற்றும் தலைமைக்காவலர் அழகர்சாமி ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

சிபிஐ விசாரணை:

இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தங்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை 6.30 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கடந்த 19-ம் தேதி இரவு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கியது தொடர்பாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்து அதிகாலை 1 மணியளவில் சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு கிளம்பிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in