Published : 16 Jul 2020 03:55 PM
Last Updated : 16 Jul 2020 03:55 PM

32 ஆண்டுகளாகி விட்டன; இன்னும் இலக்கை அடையவில்லை; அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் - ராமதாஸ் பேச்சு

செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ்

சென்னை

தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியைத் தருவார் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் 32 ஆவது ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் இன்று (ஜூலை 16) காலை நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

"கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 125 நாட்களாக பாமக தொண்டர்களை சந்திக்க முடியவில்லை. அது தான் எனக்கு பெரும் குறையாக உள்ளது. வெகுவிரைவில் கரோனா வைரஸ் ஒழியும். அதன்பிறகு உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன்.

பாமக தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32 ஆவது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் தீவிரமாக பங்காற்றத் தொடங்கும் போது தான் கரோனா வைரஸ் வந்து நமது பணிகளைத் தடுத்து விட்டது. கரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், நாம் இதுவரை எவ்வளவு வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அதைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

நம்மை வீழ்த்தும் சதி வெல்லாது

நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக பலரும் ஆரம்பத்திலிருந்தே சதி செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலிருந்தே நான் அத்தகையவர்களை பார்த்து வருகிறேன். அவர்கள் வேறு வடிவில் வருகிறார்கள். விஷப்பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நமது கொள்கைகளையே பேசி, நம்மையே அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் எதுவும் முடியாது. அந்தக் காலத்திலும் நடக்கவில்லை. இப்போதும் முடியாது.

பாரதியார் அவர்கள் 'சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில், 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?' என்று பாடியிருப்பார். பாரதியார் எப்படி சுதந்திரப் பயிரை வளர்த்ததாகக் கூறினாரோ, அதே போல் தான் நாமும் பாமகவை வளர்த்திருக்கிறோம்... வளர்த்தெடுத்திருக்கிறோம். பாமகவின் வளர்ச்சி எளிதாக கிடைத்து விடவில்லை. நாம் நமது கட்சியை வியர்வை மட்டுமல்ல... ரத்தத்தையும் சிந்தி தான் வளர்த்தெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது பாமக தான்.

சுக்கா... மிளகா... சமூகநீதி?

அதேபோல் பாரதிதாசன் 'சுதந்திரம்' என்ற தலைப்பில் சிறிய கவிதை எழுதியுள்ளார். அந்தக்கவிதையில் ஒரு கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும். அதன் சகோதரி சுதந்திரமாக சுற்றி இயற்கையின் அழகை ரசிக்கும். ஆனால், கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கிளி, கூண்டை உடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முயலாமல், வெளியில் சுற்றும் கிளியைப் பார்த்து, 'அக்கா, அக்கா' என்று கத்திக் கொண்டிருக்கும். அந்தக் கிளியைப் பார்த்து, 'ஏ... கிளியே, அக்கா, அக்கா என்று கத்துகிறாயே, சுக்கு, மிளகு என்றால் உன் அக்கா எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுப்பாள். ஆனால், சுதந்திரத்தை அவ்வாறு தர முடியாது அல்லவா?' என்று கேட்டு சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் அந்தக் கவிதையை அவர் படைத்திருப்பார்.

அந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும், 'அக்கா அக்கா என்று நீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?' என்ற வரிகளில் இருந்து தான் ஊக்கம் பெற்று, 'சுக்கா... மிளகா... சமூக நீதி?' என்ற தலைப்பில் முகநூலில் தொடர் எழுதி வருகிறேன். நேற்று வரை 38 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். சமூகநீதிக்காக பாமக அளவுக்கு பாடுபட்ட கட்சியை தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பார்க்க முடியாது.

சமூகநீதியில் நமக்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்பதால் தான், இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக இடப்பங்கீடு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். இடப்பங்கீடு என்றால் இருக்கும் 100% இடங்களை அனைவரும் பங்கிட்டுக் கொள்வது ஆகும். எங்களுக்கு யாரும் இட ஒதுக்கீட்டு வழங்கத் தேவையில்லை. இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆட்சியில் இருந்தவர்கள் நடுவில் இருந்த நல்ல துண்டுகளை எடுத்துக் கொண்டு, ஓரத்தில் இருந்ததை மற்றவர்களுக்கு ஒதுக்கி விட்டார்கள். இந்த விஷயத்தில் நமக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.

மா சே துங் வெற்றி வரலாறு

உலக அளவில் புரட்சியாளர்கள் பலரின் வரலாறுகளை நீங்கள் படித்திருப்பீர்கள். உலகின் பெரும் புரட்சியாளராகவும், இன்றைய சீனாவை 64 ஆண்டுகளுக்கு (1954) முன் உருவாக்கியவருமான மா சே துங் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர். 1930 ஆம் ஆண்டில் சீனாவை சியாங் கே சாக் என்பவர் ஆட்சி செய்த போது அவருக்கு எதிராக கம்யூனிசப் படைகளை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் போரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு லட்சம் பேர் கொண்ட தமது படையுடன் மா சே துங் பின் வாங்கி ஓடினார்.

தமது படைகளை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் மீண்டும் போர்தொடுக்கவும் வசதியாக படைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் மாசேதுங் நீண்ட பயணத்தை (Long March) மேற்கொண்டார். அப்போது ஒரு லட்சம் பேரில் 36 ஆயிரம் பேர் தவிர மீதமுள்ளவர்கள் சண்டையிலும், பசி, பட்டினியிலும் சிக்கி இறந்தனர். இறுதியாக மாவோ வசம் 7,000 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் உள்ளூர் விவசாயிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தனது அணிவகுப்பை மாவோ தொடங்கினார். அடுத்த சில மாதங்களில் தாம் இழந்த பகுதிகளை வென்றார். அடுத்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சிக்குக் கீழ் வந்தது.

அலெக்சாண்டர் வரலாறு

20 வயதில் மன்னராக பொறுப்பேற்ற அலெக்சாண்டர் 32 வயதுக்குள், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக போர் நடத்தி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான். ஆனால், பஞ்சாப் மன்னன் போரஸ் என்ற புருஷோத்தமனுடனான போரில் தோற்கும் நிலை வந்த போது, தாம் வென்ற பகுதிகளை புருஷோத்தமனிடம் கொடுத்து விட்டு வேறு நாட்டுக்குச் சென்றான். 32 வயதில் உலகத்தையே அலெக்சாண்டர் வென்றார் என்பது தான் வரலாறு.

இதிலிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், முன்னேறு... முன்னேறு... இலக்கை அடை... இலக்கை அடை என்பது தான். அலெக்சாண்டர் 32 ஆண்டுகளில் உலகை வென்றார். நாம் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இலக்கை அடைய இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்.

பாமகவின் கொள்கைகளுக்கு இணையாக வேறு எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு நாம் ஆலோசனைகளை கூறி வருகிறோம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படுகின்றன. நான் போராளி என்பது உங்களுக்குத் தெரியும். நாம் போராடி பல உரிமைகளை பெற்றுள்ளோம். ஆனால், நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் போராடிக் கொண்டும், ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருப்பது? நாம் மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டாமா? மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய வேண்டும், என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதை செய்ய நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.

லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சி

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ தான் குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை இன்றைய நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியைத் தருவார். தமிழகத்தில் அவரைவிட சிறந்த ஆட்சியை யாராலும் தர முடியாது. தமிழகத்தில் இன்னொரு கட்சித் தலைவர் இருக்கிறார். எப்படியாவது கோட்டைக்குள் ஓடிச் சென்றாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறார்.

செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

எனக்கு என்ன ஆசை என்றால், அவரையும் அன்புமணி ராமதாஸையும் ஒரே மேடையில் வைத்து ஏதேனும் ஒரு பொருள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதற்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அந்த தலைவர் விவாதத்துக்கு தயாராக இல்லை.

நம்மிடம் இருக்கும் அளவுக்கு தமிழக மக்களுக்கான திட்டங்கள் வேறு கட்சிகளிடம் இல்லை. நமது தொண்டர்கள் அளவுக்கு உழைக்க வேறு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை. நாம் இப்போது உழைப்பதைப் போன்று தொடர்ந்து உழைக்க வேண்டும். இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x