சாத்தான்குளம் சிறுமி கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

சாத்தான்குளம் சிறுமி கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் 7 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்டு, உடல் பிளாஸ்டிக் தொட்டிக்குள் திணிக்கப்பட்டு மீட்கப்பட்ட வழக்கில் போலீஸார் 2 இளைஞர்களைக் கைது செய்துள்ள நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி நேற்று காலை கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கல்விளையில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய் பாலத்துக்கு அடியில் தண்ணீர் தொட்டி ஒன்றில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பேட்டி அளித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், ‘‘கொலை தொடர்பாக 2 இளைஞர்களைக் கைது செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமை இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே அதுகுறித்து முடிவு செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த நிகழ்வான சிறுமியின் கொலை தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது சிறுமியின் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் வழக்கைக் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து அதன் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சாத்தான்குளத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து 8-வது முறையாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இதுவரை 3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் வழக்கு தொடர்பான முதற்கட்ட தகவல்களைக் கேட்டறிந்துள்ளோம். வெகுவிரைவில் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்”.

இவ்வாறு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in