Published : 16 Jul 2020 02:40 PM
Last Updated : 16 Jul 2020 02:40 PM

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17% தனி இட ஒதுக்கீடு; பல்கலைக்கழக இறுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமகவின் 4 முக்கியத் தீர்மானங்கள்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்யவேண்டும், மத்திய அரசு, வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, கிரீமிலேயரைக் கணக்கிடுவதில் தற்போதுள்ள நிலையே தொடரும்; கிரீமிலேயர் வருமான வரம்பு ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கவேண்டும் என பாமக கோரியுள்ளது.

பாமக தோற்றுவிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 17 சதவீத இட ஒதுக்கீடு, கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம்:

பல்கலைக்கழக இறுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், கரோனா வைரஸ் அச்சத்தைக் காரணம் காட்டி தேர்வுகளை ரத்து செய்யக் கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திருப்பது நியாயமல்ல. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நடைமுறை எதார்த்தங்களுக்கு ஒத்துவராததாகும்.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இப்போதுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. நிலைமை சீரடைந்த பின் தேர்வு நடத்திதான் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றால், அதற்குள்ளாக மாணவர்கள் உயர்கல்வி கற்க நினைக்கும் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிடும்.

அதனால், மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை இழந்துவிடுவார்கள். அதைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பாமக கோருகிறது.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17% தனி இட ஒதுக்கீடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம். தணிகாச்சலம் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள்தான் என்று 1931-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் ஆகியவையும் இதை உறுதி செய்துள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 9 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்திய போதிலும், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயத்தினரை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அப்பிரிவில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு உரிய சமூக நீதியும், இட ஒதுக்கீடும் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வன்னியர்களின் மக்கள்தொகை மற்றும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 17% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முறையான ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குதல்:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 50 விழுக்காட்டையும் மாநில அரசுகள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்குகின்றன.

அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பட்டியல் இனத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பொதுப் பிரிவினருக்கான இடங்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு மறுத்து வருவது, பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும்.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் அநீதியானவை, நடைமுறை சாத்தியமற்றவை. பட்டியலினத்தவருக்கு ஒரு நீதி, உயர்சாதி ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இன்னொரு நீதி என மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளைக் களையும் வகையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவித நிபந்தனையுமின்றி 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடந்த மார்ச் மாதம் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது மத்திய அரசின் முடிவுக்கான எதிர்ப்பை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளது.

கிரீமிலேயரைக் கணக்கிடும்போது சம்பளத்தையும், விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக கிரீமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று வல்லுநர் குழு பரிந்துரைத்திருப்பதும், அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதும் நியாயமற்றவை.

இந்த விஷயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலனாக நின்று போராட வேண்டிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதற்கு மாறாக, மத்திய அரசின் சமூக அநீதிக்கு துணைபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிரீமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசும், வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, கிரீமிலேயரைக் கணக்கிடுவதில் தற்போதுள்ள நிலையே தொடரும், கிரீமிலேயர் வருமான வரம்பு ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கவேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

இவ்வாறு பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x