Published : 16 Jul 2020 02:46 PM
Last Updated : 16 Jul 2020 02:46 PM

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது; மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐத் திரும்பப் பெறுக: திமுக தீர்மானங்கள்

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம்.

சென்னை

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐத் திரும்பப் பெற வேண்டும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது என திமுக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐத் திரும்பப் பெறுக!

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய நியமன அதிகாரம் உள்ளிட்ட மாநில அதிகாரங்களைப் பறிக்கும், மத்திய மின்சார திருத்தச் சட்ட மசோதா - 2020, கொண்டு வரப்படுவது, மத்திய - மாநில உறவுகளுக்கு சற்றும் ஏற்றதல்ல என்பதோடு, கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் செயலும் ஆகும் என்று இக்கூட்டம் தீர்மானமாகக் கருதுகிறது. ஆகவே, இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மின்சார திருத்தச் சட்டம் குறித்து விளக்கவே மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சமீபத்தில் சென்னை வந்து முதல்வரைச் சந்தித்தார், சட்டப்பேரவைத் தேர்தல்வரை ஒத்திவைத்திடக் கோரிக்கை வைக்கப்பட்டது, என்றெல்லாம் ஊடகங்கள் வழியாகச் செய்திகள் கசிந்தாலும், அந்தச் சந்திப்பில் மத்திய அரசு என்ன உறுதிமொழி கொடுத்து அனுப்பியது, அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக முதல்வரிடமிருந்து எவ்விதச் செய்திக்குறிப்பும் வெளிவரவில்லை; இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் 'அவர் சொன்னார்', 'இவர் சொன்னார்' என மேற்கோள் காட்டி, 'விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்குரிய பணத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது' என முதல்வரிடம் மத்திய அமைச்சர் கூறி விட்டதாக செய்திகளைப் பூசி மெழுகி உள்நோக்கத்துடன் கசிய விடுவது கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சருக்கும் முதல்வருக்கும் நடைபெற்ற மின்சார திருத்தச் சட்டம் குறித்த பேச்சுவார்த்தை விவரங்களை நேர்மையாக உடனடியாக உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டும் என்றும் மாநில அதிகாரங்களுக்கும், விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கும் எதிராக உள்ள மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பலிபீடத்தில் ஏற்றிவிடக் கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது!

தொடக்கத்திலிருந்தே கூட்டுறவு இயக்கத்தில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மத்திய பாஜக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கூட்டுறவு வங்கிகளை, நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏனைய வங்கிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மாநில கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, மாநில கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்திலும் அணுகுமுறையிலும் பல்வேறு வகையான குழப்பங்களை ஏற்படுத்தும்.

மாநில மக்களின் தேவைகள், அவற்றின் அவசரம் மற்றும் அவசியத்தின் அடிப்படையில், கூட்டுறவு வங்கிகளுக்கென்று, ஜனநாயக ரீதியாக ஆற்றிட வேண்டிய பிரத்யேகமான கடமைகள் உண்டு. அவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு வந்தால், அந்தந்தப் பகுதி மக்களின் உரிமைகளும் எதிர்பார்ப்புகளும் நசுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்; இதுவரை போற்றிக் காப்பாற்றப்பட்டு வந்த கூட்டுறவு என்ற சீரிய சித்தாந்தமே சிதைந்து போகும்.

எனவே, கூட்டுறவு இயக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மக்களின் தேவைகள் உரிமைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படவும், மத்திய பாஜக அரசு அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், பாரம்பரியமான கூட்டுறவு இயக்கம் பலியாவதற்கு அதிமுக அரசு மௌன சாட்சியாக இருத்தல் ஆகாது என்றும் இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.

நபார்டு அளித்த நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ள விவகாரத்தில் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும், சங்கங்களும் நகைக் கடன் வழங்கக் கூடாது என்று அதிமுக அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பது உண்மை என்பதால், நபார்டிலிருந்து வந்த உத்தரவு என்ன என்பதை அதிமுக அரசு வெளியிட்டு, நகைக்கடன் வழங்குவதை தொடர்ந்திட வேண்டும் என்றும், கரோனா பேரிடர் வாழ்வாதார இழப்பில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை மீட்டிட ஏற்கெனவே வழங்கியுள்ள அனைத்து நகைக் கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று அதிமுக அரசுக்கு இந்தக் கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x