Published : 16 Jul 2020 02:22 PM
Last Updated : 16 Jul 2020 02:22 PM

நீட், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்க; மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிடுக: திமுகவின் 3 முக்கியத் தீர்மானங்கள்

நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என, திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கியத் தீர்மானங்கள்:

"பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிடுக!

நாடு முழுவதிலும் இருந்து மத்திய தொகுப்புக்கு (All India Quota) மாநிலங்கள் அளித்துள்ள 9,550 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது வெறும் 379 இடங்கள் மட்டுமே!

ஆனால், மறைந்த வி.பி.சிங் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் கீழான 27 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 2,578 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அளிக்கப்பட்ட, 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு, 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கினைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மிகப் பெரிய அநீதி இழைத்து வரும் மத்திய பாஜக அரசுக்கு இக்கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திராமல், ஏற்கெனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் மத்திய பாஜக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்க! 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திடுக!

நகர்ப்புற, ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அனிதா உள்ளிட்ட பல மாணவிகளின் தற்கொலைகளுக்குக் காரணமாகி, இன்றைக்கு கிராமப்புற மருத்துவ உட்கட்டமைப்புக்குத் தேவையான மருத்துவர்கள் உருவாகவே முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வினை, ஆரம்பக்காலத்தில் இருந்தே, திமுக தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டிட விரும்புகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அரசியல் உறுதிப்பாடு இன்மையால், ஒப்புதல் பெற இயலாமல், தமிழக மாணவ - மாணவியரையும், அவர்தம் பெற்றோரையும் ஏமாற்றி, பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள அதிமுக அரசு, இன்றைக்கு நீட் தேர்வுக்கு விலக்கும் பெறவில்லை; மாறாக 'நீட் தேர்வை ஒழிப்போம்' என்று இதுவரை போட்டு வந்த கபட வேடத்தை தற்போது கலைத்து ஊராருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, 'கரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடக்கும்' என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்க்கவும் முடியாமல், கூனிக்குறுகி நிற்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகவே, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும் என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மாணவர்களின் இறுதிப் பருவத்தேர்வை ரத்து செய்க! அனைத்து பருவத்தேர்வுகளையும் ரத்து செய்க!

கரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் இருக்கிறது தமிழகத்தின் மாவட்டங்கள். சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஒரே தீவிரத்துடன் தொடருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் சார்பாக நடத்தப்படும் இறுதியாண்டு பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும் என்று, நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதை இக்கூட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது.

மாநிலக் கல்வி உரிமையில் தேவையின்றி குறுக்கிடும் அதிகார அத்துமீறலாகவே இந்த நடவடிக்கையை இக்கூட்டம் கருதுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் எல்லாம் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊரடங்கால் வெவ்வேறு ஊர்களில் மாணவர்களும், பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பருவத்தேர்வை ஆன்லைனில் எழுதுவதற்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் பருவத்தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான பருவத்தேர்வுகளையும் ஆபத்தான கரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து, மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு திமுகவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x