

அறிகுறிகளே இல்லாமல் குறையும் ஆக்சிஜன் அளவை முன்கூட்டியே கண்டறிய உதவும் 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' யாருக்கெல்லாம் அவசியம் என, முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸானது முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கிறது. அப்படிப் பாதிக்கும்போது ஆக்சிஜன் சுத்திகரிப்பு தடைப்படுகிறது.
இந்தத் தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் சாதாரண சளி, காய்ச்சல் போலவே எளிதாக குணமடைந்துவிடுகின்றனர். சிலருக்கு சளி, காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படாமலேயே, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதை 'சைலண்ட் ஹைப்பாக்சியா' அல்லது 'ஏசிம்டமேடிக் ஹைபாக்சியா' என்கின்றனர்.
அவ்வாறு ஆக்சிஜன் தடைபடுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' பயன்படுகிறது. சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும் இந்தக் கருவி மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
"ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்குக் கீழ் குறையும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவ்வாறு ஆக்சிஜன் அளவு குறைந்த பிறகு பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துவரும்போது அவரை குணப்படுத்துவது கடினமானதாகிறது. எனவே, காலை, மாலை, மதியம், இரவு என தினமும் 4 முறை 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' மூலம் ஆக்சிஜன் அளவைக் கணக்கிட வேண்டும்.
யாருக்குப் பயன்படும்?
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், ஆஸ்துமா, நிமோனியா பாதிப்பு உள்ளவர்கள், நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், இதர தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' என வந்தாலும் குறைந்தபட்சம் தொடர்ந்து 14 நாட்கள் இந்தப் பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்வது நல்லது.
ஆள்காட்டி விரலை 'பல்ஸ் ஆக்ஸிமீட்ட'ரில் வைத்தால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு (SpO2) தெரியவரும். இந்த அளவானது சராசரியாக 96 முதல் 100 வரை இருக்க வேண்டும். 95-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இதுதவிர, இதயத் துடிப்பையும் (பல்ஸ் ரேட்) 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த அளவானது ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 70 முதல் 80 வரை இருக்கலாம். இது, 60-க்குக் கீழ் குறைந்தாலும், 100-க்கு மேல் சென்றாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
விரலை சானிடைசர் கொண்டு துடைத்துவிட்டு, விரலில் 'க்ளிப்' போல 'பல்ஸ் ஆக்ஸிமீட்ட'ரைப் பொருத்த வேண்டும். பொருத்தியபிறகு 'ஸ்விட்ச் ஆன்' செய்தால், ஒரு நிமிடத்துக்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்சிஜன் அளவும் தெரியும். ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொண்ட பிறகு கருவியை விரலில் இருந்து அகற்றிவிட்டால், தன்னிச்சையாகவே 'ஆஃப்' ஆகிவிடும்.
தரமானதை எப்படி வாங்கலாம்?
பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வழக்கமாக மருந்து வாங்கும் கடைகளிலும், நீண்ட காலம் உள்ள கடைகளிலும் வாங்குவது நல்லது. அவர்கள் தரமற்ற பொருளை அவசர கதியில் விற்க முற்படமாட்டார்கள்.
வீட்டில் உள்ள நபர்களுக்கு வெவ்வேறு அளவு காட்டாமல், ஒரே மாதிரி காட்டினால் 'பல்ஸ் ஆக்ஸிமீட்ட'ரில் பிரச்சினை இருப்பதைக் கண்டறியலாம். அதேபோல, எல்லா நேரமும் ஒரே நபருக்கு ஒரே மாதிரியான அளவு காட்டினாலும் குறைபாடு இருக்கிறது என்று கருதலாம். ஏனெனில், காலை, மதியம், இரவு என ஒவ்வொரு நேரத்துக்கும் சற்று அளவு மாறுபடும். தரமான பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ரூ.1,500 முதல் கிடைக்கின்றன".
இவ்வாறு குழந்தைசாமி கூறினார்.