Published : 16 Jul 2020 01:41 PM
Last Updated : 16 Jul 2020 01:41 PM

கரோனாவைத் தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட உரிய நடவடிக்கை எடுத்திடுக: திமுக தீர்மானம்

கரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

1. கரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

கரோனா நோய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த நோயைக் கண்டறிவதிலோ, நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடித்து கரோனா சங்கிலித்தொடரை அறுத்துத் தடுப்பதிலோ, நோய்த் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலோ அதிமுக அரசு, வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல், உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கிருமிநாசினி கொள்முதலிலும், மனசாட்சி சிறிதும் இன்றி, ஊழல் - முறைகேடுகள் செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா நோய்த்தொற்று 1.50 லட்சத்தைக் கடந்து, 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, அரசு மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள், வென்டிலேட்டர்கள் இன்றித் தவிக்கும் நெருக்கடியான இந்தச் சூழலிலும், பல துறைகளிலும் டெண்டர்கள் விடுவது, ஊழலுக்கான நோக்கில் ஒவ்வொரு மாவட்டமாகப் போய் கூட்டம் போடுவது என்று, அரசு நிர்வாகத்தை அலங்கோலப்படுத்தி, மக்களை அல்லல்படுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.

அமைச்சர்கள், அதிகாரிகள் இடையே பனிப்போர் தொடங்கி, இப்போது தேர்தல் கால வசூல், தேர்தல் கால 'ஐபிஎஸ் போஸ்ட்டிங்' போன்றவற்றில் அதிமுக அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவது, மக்கள் முன்பு உள்ள கரோனா சவாலை உரிய வகையில் சந்திப்பதில் இந்த அரசு பெருமளவு தோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது.

கரோனா முன்கள வீரர்களுக்குக் கூட போதிய கவச உடைகள் கொடுக்காததால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள் உயிரிழப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிர்த்தியாகம் செய்த கரோனோ முன்கள வீரர்களுக்கு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிதியுதவியைக் கூட இன்னும் அதிமுக அரசு வழங்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வழங்கியுள்ள ஆலோசனைகளையும், தற்போது மருத்துவம், பொருளாதாரம், தொழில் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழங்கி வரும் ஆலோசனைகளையும் அதிமுக அரசு உடனடியாக ஆழ்ந்து பரிசீலனை செய்து, நிறைவேற்றி, உள்தமிழகத்தில் வேகமாகப் பரவும் கரோனா நோயைத் தடுத்திடவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதோடு, பிற நோயால் பாதிக்கப்படுவோருக்கு உரிய வழக்கமான சிகிச்சைகள் மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

100 நாட்களுக்கு முன்பே, 'கரோனா 3 நாட்களில் பூஜ்ஜியமாகிவிடும்' என்று சொன்ன முதல்வர் பழனிசாமி நேற்று (ஜூலை 15), 'பத்து நாட்களில் கரோனா பரவல் குறைந்துவிடும்' என்று இரண்டாவது முறை நம்பிக்கை தெரிவித்து, ஆரூடம் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது; அவருக்கு கரோனாவைப் பற்றியோ, அது ஏற்படுத்திவரும் கடும் பாதிப்புகளைப் பற்றியோ சரியான பார்வை இல்லை என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது.

கரோனாவை யாரும் பொழுதுபோக்குப் பொருளாகக் கொள்ளக் கூடாது; அது உயிர்களை அச்சுறுத்தும் மிகக் கடும் நோய்த் தொற்று என்று உணர்ந்து, அதைத் தடுப்பதற்கேற்ற விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x