Published : 16 Jul 2020 01:28 PM
Last Updated : 16 Jul 2020 01:28 PM

மின் கட்டண உயர்வை எதிர்த்து ஜூலை 21-ல் கண்டனப் போராட்டம்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை

மின்கட்டணக் குளறுபடிகளை எதிர்த்து ஜூலை 21-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றி, கண்டனப் போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மின்கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம், கரோனா நோய்த்தொற்று சிகிச்சை, சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல தீர்மானங்கள் அடக்கம்.

மின்கட்டண உயர்வை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானம்:

“ஊரடங்கைப் பிறப்பித்தது - மக்கள் வெளியில் போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது - ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தது எல்லாம் அதிமுக அரசு. ஆனால், ஊரடங்குகால மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரினால் மட்டும், “நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது” என்று மக்கள் மீதே பழி சுமத்துவதும் அதிமுக அரசே!

தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின் கட்டணத்தை, எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிமுக அரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மின்சாரச் சட்டத்திலேயே “நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியமே அச்சட்டத்தின் கீழ்தான் இயங்குகிறது.

ஆகவே, கரோனா காலத்தை சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணச் சலுகை அளிப்பதில் அதிமுக அரசுக்கு எவ்வித தடையும் இல்லை. மத்தியப் பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கரோனா கால மின்கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக செய்திக்குறிப்பு ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலைகொள்ளாத கருணையற்ற போக்காகும்.

ஆகவே, அதிமுக அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்கக் கோரியும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும் ஜூலை 21 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

கட்சி நிர்வாகிகள் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு திமுக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x