Last Updated : 16 Jul, 2020 01:18 PM

 

Published : 16 Jul 2020 01:18 PM
Last Updated : 16 Jul 2020 01:18 PM

கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நாளை முழு அடைப்புப் போராட்டம்

மயிலாடுதுறை

முப்பது வருடப் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிறந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தைப் பிரித்துத் தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை கும்பகோணம் வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பகுதி முழுவதும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அடைத்து சுய ஊரடங்கில் ஈடுபடப் போவதாக குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் என மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதே கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் இதை ஆதரித்து வந்தன. கடந்த 2011-ம் ஆண்டு, பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தற்போதைய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையிலேயே பேசினார்.

கடந்த ஆண்டின் மத்தியில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டார். அறிவிப்போடு அது நின்று கொண்டிருக்க, பக்கத்தில் உள்ள மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவெடுத்துவிட்டது. அதற்கெனத் தனி அதிகாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன் எல்லைகளை வகுத்து மாவட்டத்தை உருவாக்கும் வேலைகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

இந்நிலையில்தான் தங்களது கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கும்பகோணம் தனி மாவட்டப் போராட்டக் குழுவினர் முனைப்போடு களமிறங்கியுள்ளனர். பொதுமுடக்கக் காலத்தில் தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் வீடு மற்றும் கோயில்களின் வாசல்களில் கோலம் வரைந்து வேண்டுகோள் விடுத்த இவர்கள், தற்போது கடைகளை அடைத்து அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைத் தனியாகப் பிரித்து, தனி மாவட்டம் அமைத்தது போல தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வருவாய்க் கோட்டத்தைப் பிரித்துத் தனி மாவட்டமாக்க வேண்டும், இதிலுள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்தப் புதிய மாவட்டம் அமைய வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்காக, இந்த மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும், இதர தொழில் நிறுவனங்களையும் நாளை ஒருநாள் மட்டும் அடைத்துப் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு அனைத்துக் கட்சியினர், கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பு, வழக்கறிஞர்கள் சங்கம், தன்னார்வ சேவை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x